| ADDED : ஆக 17, 2024 02:11 AM
மதுரை: 'கோல்கட்டாவில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று (ஆக.,17) காலை 7:30 முதல் 8:30 மணி வரை ஒருமணிநேரம் புறநோயாளிகள் சேவை நிறுத்தப்படும்'' என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பெண் டாக்டர் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய மருத்துவ கழகம் அறிவித்துள்ள போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ஆதரவு அளிக்கிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று (ஆக.,17) காலை 7:30 முதல் 8:30 மணி வரை புறநோயாளிகள் சேவை புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும். காலை 9:00 மணிக்கு அனைத்து அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், கல்லுாரி இல்லாத மாவட்டங்களில் தலைமை மருத்துவமனைகளில் மனிதச்சங்கிலி, அமைதி ஊர்வலம் நடத்தப்படும். அரசு, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து வேலை செய்வர். பாதுகாப்பு அவசியம்
டாக்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய மருத்துவர், மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்றார்.