| ADDED : நவ 24, 2025 06:52 AM
மதுரை: மதுரையில், நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், அதிக பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர். எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணியில் நில அளவை களப்பணியாளர்களை ஈடுபடுத்துவது, பெண் களப்பணியாளர்களுக்கு இரவுப் பணி வழங்குவதை தவிர்க்க வேண்டும். பூத் லெவல் ஆபீசர் (பி.எல்.ஓ.,) பணியை நில அளவை களப்பணியாளர்களை செய்யச் சொல்வதை தவிர்க்க வேண்டும். நில அளவை பணியுடன் தேர்தல் பணியையும் செய்ய அழுத்தம் கொடுப்பது, ஆய்வுக் கூட்டங்களில் புள்ளிவிவரங்கள் கேட்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி போராட முடிவு செய்தனர். மாநிலத் தலைவர் மகேந்திரகுமார் கூறுகையில், ''இன்று (நவ.24) கோரிக்கை அட்டையுடன் கருப்புச் சட்டை அணிந்து பணியாற்றுவது, நவ., 25, 26ல் 48 மணி நேரம் தொடர் விடுப்பு எடுப்பது, நவ., 28 காலை 11:00 மணிக்கு தலைமை அலுவலகம் முற்றுகை என 3 கட்டங்களாக போராட்டம் நடக்கவுள்ளன'' என்றார்.