| ADDED : மார் 05, 2024 05:39 AM
மதுரை : 'இரண்டு முதல்வர்கள் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை, செயல்படுத்தாமல் வருவாய் துறை நிர்வாகம் தாமதம் செய்வது முறையாகாது' என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இச்சங்கத்தின் மாநில தலைவர் முருகையன், பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் கூறியிருப்பதாவது:பிப்.,13 முதல் தற்செயல் விடுப்பு, உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம் நடந்த நிலையில், அரசிடம் இருந்து சாதகமான பதில் இல்லாததால் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்கிறோம். மாவட்ட நிர்வாகம் முடங்கி உள்ளது. பொதுமக்கள் சேவை, லோக்சபா தேர்தல் பணிகள் பாதித்துள்ளன.எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, வருவாய் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர் பணியிடங்களின் பெயரை இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் என மாற்றம் செய்து அறிவித்து ஆணையும் வழங்கினர். ஆனால் பல்வேறு காரணம் கூறி, விதிகளில் திருத்தம் செய்யாமல் இழுத்தடிக்கின்றனர்.அரசின் ஆணையை நிர்வாகம் மதிக்க மறுப்பது ஜனநாயக மறுப்பாக உள்ளது. இக்கோரிக்கை மீண்டும் ஏற்கப்பட்டு, கடந்த 10 மாதங்களாக கிடப்பில் உள்ளது முறையற்றது. அலுவலக உதவியாளர் பணியிடங்களை 2 முதல்வர்கள் உத்தரவிட்ட பின்பும் நான்கு ஆண்டுகளாக காலதாமதம் செய்வது வருந்தத்தக்கது. அமைச்சர்களால் ஏற்கப்பட்டவற்றை மாதக்கணக்கில் மறுப்பது வருவாய் அலுவலர்களிடம் பெரும் அதிருப்தியை, மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.எனவே காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்வது, அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் இரவு பகலாக தொடர்ந்து காத்திருப்பது, இதிலும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் லோக்சபா தேர்தல் பணிகளை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.