நாமக்கல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குழந்தைகளுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 660 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.சேந்தமங்கலம் தாலுகா, சிவநாயக்கன்பட்டி காட்டுக்கொட்டாயை சேர்ந்த கனிஷ்கா, 8, மதன், 7, ஆகியோர், 2022 மார்ச், 27ல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதையடுத்து, அவர்களது தாயார் சரண்யாவிடம், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா, ஒரு லட்சம் ரூபாய் வீதம், மொத்தம், இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட, மூன்று பேருக்கு, தலா, 9,350 வீதம், 28,050 ரூபாய் மதிப்பில், சிறப்பு சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.