| ADDED : ஆக 16, 2024 05:33 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் கிராமத்தில், இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் தர்மபுரி மற்றும் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவை இணைந்து, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், குழந்தை திருமணம் தடுப்போம், டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா ஆகியவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தருமபுரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் அலுவலர் பிபின் நாத் வரவேற்றார். ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., பார்த்திபன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், வளரிளம் பெண்கள், பெண்கள் ஆகியோருக்கு பரிசு வழங்கி பேசுகையில்,'' நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் இளம் வயது திருமணங்கள் நடப்பதை தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகிறோம். சமூக நலத்துறை அலுவலர்கள், 1098 இலவச தொலைபேசி எண் ஆகியவற்றை தொடர்பு கொண்டு இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்தலாம். பெண் குழந்தைகளை படிக்க வைத்தால், அந்த குடும்பம் பொருளாதார பிரச்னையிலிருந்து மீண்டு வரும். பெண் குழந்தைகளின் கல்வி திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவகிறது,'' என்றார்.மாவட்ட சமூக நல அலுவலர் சவிதா, நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ராஜேந்திர பாபு, ராசிபுரம் வட்டார மருத்துவ அலுவலர் செல்வி, ராசிபுரம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் யோகநாயகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.