| ADDED : ஜன 19, 2024 11:44 AM
நாமக்கல்: பொங்கல் பரிசு வாங்க தேதி நீட்டிப்பு செய்யாததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழக அரசு, பொங்கல் விழாவையொட்டி பொங்கல் தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்கியது. பொங்கல் தொகுப்பு பெற நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்டத்தில், 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு பெற்றுள்ளனர். 33 ஆயிரம் பேர் மட்டுமே பொங்கல் தொகுப்பை பெறவில்லை.இந்நிலையில், பொங்கல் பரிசு வாங்காதவர்களின் கரும்புகளை விற்று அதற்கான தொகையை விற்பனையாளர்கள் செலுத்த வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது. கரும்புகளை வெட்டி, ஒரு வாரம் ஆனதால் பெரும்பாலான கரும்பு சோகைகள் வாடிவிட்டன. வாடியுள்ள கரும்பு ஒன்றை, 24 ரூபாய் வீதம் விற்று பணத்தை கட்ட சொன்னதால் ரேஷன் கடை விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், பொங்கல் தொகுப்பு வழங்குவதை, 14ம் தேதியுடன் நிறுத்த சொல்லிவிட்டனர். 15ம் தேதி விடுமுறை என்பதால், 14ம் தேதி மாலை விற்பனையாளர்கள் வாங்காதவர்களின் விபரங்களை கணக்கு கொடுத்து விட்டனர்.இதனால், ரேஷன் கடைகளில் இனிமேல் பொங்கல் தொகுப்பு, பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பொங்கல் தொகுப்பு வாங்காதவர்கள், ஜனவரி இறுதி வரை வாங்குவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு அவகாசம் வழங்காததால் வாங்காதவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.