| ADDED : நவ 25, 2025 02:04 AM
ராசிபுரம், : ராசிபுரம் ஒன்றியத்தில் வயல்காடான சாலையில், நேற்று நாற்று நடும் போராட்டம் நடந்தது. ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி அடுத்த பிரித்தி நகரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நகருக்கு போதுமான சாலை வசதி இல்லை. குண்டும், குழியுமாக இருந்த சாலையில் பொதுமக்கள் டூவீலரில் சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இப்பகுதி மக்கள் கொடுத்த கோரிக்கை மனுவை அடுத்து, ஊராட்சி நிர்வாகம் சாலையை சமப்படுத்தி கொடுத்தது. கடந்த சில நாட்களாக, தொடர்ந்து பெய்த மழையால், இந்த சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதிலேயே இப்பகுதி மக்கள் டூவீலரில் அடிக்கடி சென்று வருவதால், சாலை முழுவதும் வயல் ஓட்டியது போல் காணப்பட்டது. இதனால், டூவீலரில் செல்வோர் தடுமாறி வழுக்கி விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வயல்காடான சாலையில், நேற்று நாற்று நட்டு நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ., வக்கீல் அணி நிர்வாகி குமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.