ஊட்டி:ஊட்டி தங்காடு கிராமத்தில், பாலகொலா ஊராட்சி மன்றத்தின், கிராம சபை கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர் கலையரசி தலைமை வகித்தார். கலெக்டர் லட்சுமி பவ்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 25 பயனாளிகளுக்கு, 54.58 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட வழங்கினார்.கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், துாய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் மற்றும் கனவு இல்ல திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்து கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு, துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு, கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.தொடர்ந்து, '12 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 30 லட்சம் ரூபாய் வங்கிக் கடன்; இரண்டு குழந்தைகளின் தாய்மார்களுக்கு, மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், தலா இரண்டு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம்; மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், நான்கு பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் மற்றும் ஏழு பயனாளிகளுக்கு, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வீடுகள் கட்ட அனுமதி ஆணை,' உட்பட, 25 பயனாளிகளுக்கு, 54.58 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.நீலகிரி எஸ்.பி., நிஷா, கூடுதல் கலெக்டர் கவுசிக், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, வருவாய் கோட்டாட்சியர் மகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.