| ADDED : ஜூன் 03, 2024 12:37 AM
பந்தலுார்;பந்தலுார் அருகே போதை பொருள் விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் எம்.டி.எம்.ஏ., எனப்படும் போதை பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, தேவாலா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதில், பந்தலுார் பஜாரை சேர்ந்த அஜ்மல்,25, என்பவர், பெங்களூருவில் இருந்து போதை பொருளை வாங்கி வந்து, பந்தலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சில்லரையில் விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் அஜ்மலை கைது செய்து விசாரணை செய்ததுடன், விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த, 20 கிராம் எம்.டி.எம்.ஏ., போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், இவருடன் இளைஞர்கள் சிலர் சேர்ந்து, போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. அது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.