ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பட்டாலியன் பிரிவு போலீஸ்காரர் சவுந்தர்ராஜ்,29, கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நீலகிரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், ஊட்டி டவுன் டி.எஸ்.பி., யசோதா மேற்பார்வையில், ஊட்டி ஜி1 போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாபிரியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதில், எஸ்.ஐ., பிரகாஷ், போலீஸ்காரர்கள் ஈஸ்வரன், சசிகுமார், மனோஜ்குமார், பார்த்திபன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் பல இடங்களில் இந்த சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.இந்நிலையில், போலீஸ்காரர் சவுந்தர்ராஜூடன் சேர்ந்து, மதுரையை சேர்ந்த கோகுல்,30, தேனி மாவட்டத்தை சேர்ந்த கல்கிசுந்தரம்,28, செல்வமுருகன்,35, ஆகிய 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.இவர்கள், தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த பாண்டிசெல்வம் என்ற மொத்த வியாபாரியுடன் சேர்ந்து, பல இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதில், கோகுல் என்பவர், மதுரை சி.பி.ஐ., பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் ஆவார். பட்டப்படிப்பு முடித்துள்ள கல்கி சுந்தரம் விவசாயமும், செல்வமுருகன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும் பணியாற்றி வந்தனர். 'இவர்கள் குறுகிய காலத்தில் பல லட்சம் ரூபாய் கஞ்சா விற்பனையில் வருமானம் பார்த்துள்ளனர்,' என்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது.