ஊட்டி:'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பபட்ட மனுவில் எந்த பதிலும் முறையாக இல்லை; படகு இல்லம் ஏரியில் சட்ட விரோதமாக நடந்து வரும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் ஊட்டி படகு இல்லத்தில், அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், 'மாபெரும் ஊஞ்சல், ரோலர் கோஸ்டர், பங்கீ ஜம்பிங், தொங்குபாலம்,' உட்பட பல வகையான சாகச விளையாட்டுகள், 5.50 கோடி ரூபாய் மதிப்பீல் நடந்து வருகிறது. இதற்காக படகு இல்லத்தின் இருகரைகளில் அடித்தளம் அமைக்கப்பட்டு சாகச விளையாட்டு போட்டிக்கான கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதில், சில பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதால், சீசனுக்கு திறக்க சுற்றுலா வளர்ச்சி கழகம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஊட்டிக்கான, 'மாஸ்டர் பிளான்' சட்டத்தை மீறி படகு இல்லம் ஏரி கரையை ஒட்டி கட்டுமான பணிகள் நடப்பதால் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும், கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.இதற்கிடையே, ஊட்டியை சேர்ந்த வக்கீல் ஸ்ரீ ஹரி 'இப்பணிகள் சட்டத்திற்கு புறம்பாக நடந்து வருகிறது,' என, கலெக்டர் உட்பட சம்மந்தப்பட்ட துறைக்கு புகார் மனு அளித்தார். ேமலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல கேள்விகளை எழுப்பியும் பயனில்லை. ஊட்டி வக்கீல் ஸ்ரீஹரி கூறுகையில், ''ஊட்டி படகு இல்ல ஏரியில் சட்டத்திற்கு புறம்பாக பணிகள் நடந்து வருவது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 10 வினாக்களை எழுப்பி அவற்றிற்கு பதில் கேட்டுள்ளேன். ''அதற்கு வந்த பதில் ஏதும் முறையாக இல்லை. இத்திட்டத்தால், படகு இல்லம் ஏரியில் இயற்கை அழகு பாதிக்கப்பட்டுள்ளது. 'மாஸ்டர் பிளான்' சட்டம் பகிரங்கமாக மீரப்பட்டுள்ளது. ''சட்ட விரோதமாக நடந்து வரும் இப்பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், விரைவில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் ,'' என்றார்.