| ADDED : ஜூன் 20, 2024 05:08 AM
பந்தலுார் : பந்தலுார் பகுதியில், 'நீலப்புலி' பட்டாம் பூச்சிகள் அதிகளவில் பறந்து செல்வது இயற்கை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், வறண்டு காணப்பட்ட வனப்பகுதிகள் மற்றும் புல்வெளிகள் தொடர் மழை காரணமாக பசுமைக்கு மாறி பூக்கள் பூக்க துவங்கி உள்ளன. இதனால், வன விலங்கு நடமாட்டம்; பறவைகள் அதிகளவில் காணப்படுகின்றன.இந்நிலையில், 'நீலப்புலி' எனப்படும் பட்டாம்பூச்சிகள் கூட்டம், கூட்டமாக பறந்து வந்து, பூக்களில் மகரந்த சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறது. நீல நிறத்தில் அழகாக காட்சி தரும் இந்த பட்டாம்பூச்சிகள், ஒவ்வொரு செடியிலும் கொத்து, கொத்தாக காணப்படுகிறது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பழங்குடியினர் சங்க நிர்வாகி சந்திரன் கூறுகையில், ''வனப்பகுதிகள் மற்றும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் இயற்கை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் தற்போது பட்டாம்பூச்சிகள் அதிகளவில் காணப்படுகின்றன. உலகில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி வகைகள் உள்ள நிலையில், 'புளூ டைகர்' எனப்படும் நீலப்புலி வகை பட்டாம் பூச்சிகள் தற்போது இங்கு காணப்படுவது பயணிகள்; பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது,'' என்றார்.