உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம் வாங்க படிக்கலாம்! ஆர்வம் காட்டாத ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம் வாங்க படிக்கலாம்! ஆர்வம் காட்டாத ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

பெ.நா.பாளையம்:தமிழக அரசு பள்ளி களில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதில், ஆர்வம் காட்டாத, உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணி இட மாறுதல் செய்யப்படுவார்கள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா காலகட்டத்துக்கு பிறகு, தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு மாறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பொருளாதாரம் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், பெரும்பாலான தமிழக அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளை விட, ஏராளமான சலுகைகள் கிடைக்கும் என்பது முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

நலத் திட்டங்கள்

அரசு பள்ளிகளில், தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கிளாஸ் வாயிலாக, கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆடல், பாடல், விளையாட்டு வாயிலாக பாடங்களை கற்றுக் கொள்ளும் எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளது. இது தவிர, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், பள்ளி நேரம் முடிந்த பின்னும் கற்க விரும்பும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டம், கையடக்க கணினி வாயிலாக மற்றும் புதிய கல்வி முறை கற்பிக்கப்படுகிறது. காற்றோட்டமான வகுப்பறைகள், மின்விசிறி, விளையாட்டு மைதானம் உள்ளது. சுகாதாரமான குடிநீர் வசதி, அமைதியான சூழலுடன் கூடிய பள்ளி கட்டடங்கள், அரசின் மருத்துவ பரிசோதனைகள், மாணவர்களின் தனி திறன்களை ஊக்குவித்தல், முறையான யோகா பயிற்சிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி, கலைப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் உள்ளன.இது தவிர, உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, இந்த ஆண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான ஊக்கத்தொகை திட்டம், மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

4 லட்சமாக உயர்த்த நடவடிக்கை

நேற்று முன்தினம் நிலவரப்படி, தமிழக அரசு பள்ளிகளில் இதுவரை மூன்று லட்சத்து, 27 ஆயிரத்து, 940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மே இரண்டாவது வாரத்தில், 4 லட்சமாக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.நரசிம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி முருகன் கூறுகையில், குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி இருந்தாலும், ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து 'டி.சி.,' பெற முடியவில்லை என்ற சிக்கல் இருந்தாலும் கவலை வேண்டாம். பிறப்பு சான்றிதழின் அடிப்படையில் அவர்களின் வயதுக்கேற்ற வகுப்பில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றார்.இது தவிர, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், அந்தந்த அரசுப்பள்ளியில் உள்ள பல்வேறு வசதிகளை துண்டு பிரசுரங்களில் குறிப்பிட்டு, பொதுமக்களிடம் விநியோகம் செய்து வருகின்றனர். அதே பகுதியில் மாணவர் சேர்க்கையையும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.

உபரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்

மாணவர் சேர்க்கையை அதிகரிக்காத, அரசு பள்ளிகளின் உபரி ஆசிரியர்கள் கட்டாய இடமாற்றம் செய்யப்படுவார்கள் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில் தேவையானதை விட, 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளதை தொடக்க கல்வி இயக்குனரகம் பட்டியல் எடுத்துள்ளது. இந்த உபரி ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு அதிகரிக்கா விட்டால், தொடர்புடைய ஆசிரியர்களுக்கு எந்த பள்ளியில் ஆசிரியர் தேவை உள்ளதோ, அந்த பள்ளிக்கு கண்டிப்பாக இடம் மாற்றம் இருக்கும் என, தொடக்கக் கல்வி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை