| ADDED : ஆக 11, 2011 10:57 PM
கூடலூர் : 'முதுமலையில் நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது,' என வனத்துறையினர் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது தொடர்ந்து பருவ மழை பெய்து வருகிறது. இதனால், இங்குள்ள மாயார் ஆறு, கேம்ஹட், ஓம்பெட்டா உள்ளிட்ட தடுப்பணைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதே போன்று இந்த ஆண்டு கோடையில் அமைக்கப்பட்ட தண்ணீர் நீர் குட்டைகள், சிறிய தடுப்பணைகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. வனப் பகுதியில் பரவலாக நீர் குட்டைகள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வன விலங்குகளுக்கு தண்ணீர் தடையின்றி கிடைத்து வருகிறது. 'வனப் பகுதிகளில் ஏற்கனவே உள்ள நீர் நிலைகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீர் குட்டைகள் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடுவதால், வரும் கோடை காலத்தில், வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது,' என வனத்துறையினர் தெரிவித்தனர்.