உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  குன்னுார் அருகே உலா வரும் சிறுத்தை, யானை உஷாராக இருக்க வனத்துறை அறிவுரை

 குன்னுார் அருகே உலா வரும் சிறுத்தை, யானை உஷாராக இருக்க வனத்துறை அறிவுரை

குன்னுார்: 'குன்னுாரில் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் சிறுத்தை, யானையால் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்,' என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளுக்கு அருகே உள்ள இடங்களில் கட்டுமான பணிகள் அதிகரித்துள்ளது. 'வனங்களுக்குள் உள்ள பட்டா நிலங்களில் மரங்கள் வெட்டி கடத்துவது, சாலை அமைப்பது, பாறை உடைப்பது,' என, விதிமீறல்கள் நடந்து வருகிறது. இதனால், விலங்குகளின் வழித்தடம் மாறி, அவைகள் தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகள், தேயிலை எஸ்டேட்டுகளிலும் உலா வருகின்றன. அதில், சிறுத்தைகள், நாய்களை வேட்டையாட இரவு நேரங்களில் குடியிருப்புக்கு வருகின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் பழைய அருவங்காடு சாலையில், முனீஸ்வரர் கோவில் அருகே வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்புக்கு சிறுத்தை வந்தது. நாயை வேட்டையாட முயன்றதில் அங்கு வீட்டின் வெளியே வைத்திருந்த பாத்திரங்கள் உருண்டன. ஒற்றை யானை இதேபோல, மேலுார் பகுதியில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்ட, 7 காட்டு யானைகள், இரவில், தூதுார்மட்டம், கொலக்கம்பை, சட்டன் எஸ்டேட், லூசியானா, உட்லாண்ட்ஸ், முசாபுரி மேரக்காய்களை உட்கொண்டு பகலில் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த யானைகள், குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட அதிகரட்டி அல்லாடா வேலி, பலாமரத்து லைன், கிளிஞ்சாடா காக்காச்சி, கெந்தளா, சன்னி சைடு, கிரேக்மோர், பகுதிகளிலும் உலா வருகிறது. இதில், ஒற்றை ஆண் யானை தனியாக பிரிந்து நேற்று முன்தினம் பரஞ்சிரா பகுதியில் முகாமிட்டது. கண்காணிப்பில் ஈடுபட்ட வனத்துறையினர், 'கிளிஞ்சாடா , பாரத்நகர், உள்ளிட்ட பகுதிகளில் உலா வருவதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்,' என, அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை