உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  வயநாடன் செட்டி சங்கம விழா -திருவாதிரை நடனத்தில் அசத்திய பெண்கள்

 வயநாடன் செட்டி சங்கம விழா -திருவாதிரை நடனத்தில் அசத்திய பெண்கள்

பந்தலுார்: வயநாடன் செட்டி சமுதாய சங்கம விழாவில், 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மெகா திருவாதிரை நடனம் அனைவரையும் கவர்ந்தது. பந்தலுார் அருகே, கேரள மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரியில், வயநாடன் செட்டி சமுதாய சங்கம விழா நடந்தது. மாரியம்மன் கோவில் வளாகத்தில் இறை வணக்கத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், சங்கத்தின் பொதுச் செயலாளர் சதீஷ் கோவிந்தன் வரவேற்றார். தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்து பேசுகையில், ''தமிழகத்தின் தாராபுரத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் செட்டி சமுதாய மக்கள். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில், ஆர்வம் கொண்ட இவர்கள் கடந்த கா லத்தில், நீலகிரி மற்றும் வயநாடு பகுதியில் குடியேறினர். அது முதல் வயநாடன் செட்டி என்று அழைக்கப்படும், இந்த சமுதாயத்தில் குடும்ப உறவுகளை சந்திக்கவும், பெண் பார்க்கும் நிகழ்வை நடத்தவும், இந்த சங்கம நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும். விவசாயிகள் தங்கள் விவசாய தோட்டங்களில் விளைவித்த, அரிசியை மற்றும் காய்கறிகளை கொண்டு வந்து அதனை சமையல் செய்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து உட்கொள்வதும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக உள்ளது,'' என்றார். கூடலுார் எம்.எல்.ஏ., ஜெயசீலன், சுல்தான் பத்தேரி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினர். ஒருங்கிணைப்பாளர் விஜயன், சமுதாயத்தின் தமிழ்நாடு தலைவர் வேணு, கணபதி கோவில் தலைவர் கோபாலப்பிள்ளை, குட்டப்பன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற, மெகா திருவாதிரை நடனத்தில், 13 வயது முதல், 70 வயது வரை உள்ள பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து செண்டை மேள கச்சேரியுடன், சமுதாய மக்கள் பங்கேற்ற ஊர்வலம் பஜார் வழியாக கணபதி கோவிலை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பல்வேறு நடனங்கள், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவிலில் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. நிர்வாகிகள் சண்முகம், தர்மராஜன் மாஸ்டர், கங்காதரன், வாசு, சுரேந்திரன் உட்பட 5,000 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி