| ADDED : ஆக 13, 2024 12:21 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் தங்களது குறைகள், கோரிக்கையை மனுவாக தருகின்றனர். அப்போது மனுவை கம்ப்யூட்டரில் பதிவு செய்வதற்கு மட்டும் ஒரு மணிநேரம் வரை காத்திருந்து சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு புதிய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தீர்வு காண வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வாரந்தோறும் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் மாவட்ட உயர் அதிகாரிகளான கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ., தாசில்தார்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதனால் தங்கள் மனுவின் மீது உடனடி விசாரணை மேற்கொண்டு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாரந்தோறும் பல்வேறு குறைகள், கோரிக்கைகளுடன் தனியாகவும், கிராம மக்கள் ஒன்றாக வந்தும் மனு அளிக்கின்றனர்.இதன்படி 300 முதல் 500 மனுக்கள் வரை வாரந்தோறும் பெறப்படுகின்றன. இவற்றை முறைப்படி கம்ப்யூட்டரில் பதிவு செய்து ரசீது வழங்கப்படுகிறது. அதன் பிறகு வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் என தனித்தனி வரிசையாக சென்று கலெக்டரிடம் மனு அளிக்கின்றனர். இந்நிலையில் சர்வர் பழுது, போதிய பணியாளர்கள் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் மனுவை பதிவு செய்வதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் உட்கார போதிய இடமின்றி நமது பெயரை எப்போது வாசிப்பார்கள் எனத் தெரியாமல் ஒரு மணிநேரம் வரை காத்திருந்து மக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே திங்களன்று சர்வர் பழுதை சரி செய்யவும், கூடுதலாக பணியாளர்களை நியமனம் செய்து இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண புதிய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.