சேலம், ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ், 29. தொழில் நிமித்தமாக சேலம் வந்தபோது, சேலம், 13வது வார்டு தி.மு.க., செயலர் மகேந்திரனிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கடேஷ் கடத்தப்பட்டதாக புகார் வர, அழகாபுரம் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து வெட்கடேஷ் உள்பட, 3 பேரை மீட்டனர். இதுதொடர்பாக மகேந்திரன் உள்பட, 9 பேரை கைது செய்தனர்.இதன் விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகேந்திரன் தரப்பிலான கும்பல், வெங்கடேஷ், அவரது நண்பர்கள் எபினேசர், டோனியை கடத்தி தாக்கியுள்ளனர். வெங்கடேசன் தாய் செல்வி புகார்படி, நாங்கள், 3 பேரையும் மீட்டோம். அவர்கள் காயம் அடைந்திருந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். தொடர்ந்து மகேந்திரன், தினேஷ் உள்பட, 9 பேரை கைது செய்தோம். பிரபு உள்பட, 4 பேரை, தனிப்படை போலீசார் தேடுகின்றனர். இந்நிலையில் பணம் வாங்கி மோசடி செய்ததாக மகேந்திரன் புகார் அளித்தார். அதனால் கன்னங்குறிச்சி போலீசார், வெங்கடேஷ், டோனி, எபினேசர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதேநேரம் மகேந்திரன் தரப்பிலான கும்பல், வெங்கடேஷ் உள்பட, 3 பேரை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். சிகரெட்டால் வெங்கடேசன் தொடை, பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.