சேலம்:அகில இந்திய கட்டட வல்லுனர் சங்கம், சேலம் மையம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விலையேற்றம்
ஜல்லி, கருங்கல், 'எம் - சாண்ட், பி - சாண்ட்' உள்ளிட்ட கனிம பொருட்கள், 100 சதவீத விலையேற்றத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சேலம் மைய தலைவர் சிவபெருமாள் தலைமை வகித்தார்.அதில் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கவும், அதன் விலையை முறைப்படுத்த, ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து குவாரிகளை கூடுதலாக திறக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து சிவபெருமாள் கூறியதாவது:அனைத்து மாவட்டங்களிலும் கிரஷர் இயக்க அனுமதிக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் கிரஷர் இயக்குவதால், அவர்கள் வைப்பதே விலையாக உள்ளது.அதனால் அதற்கான சட்ட விதியில் திருத்தம் செய்து கிரஷர், அதன் உற்பத்தியை, 2 மடங்கு அதிகரித்தால், விலை தானாக குறையும். இல்லையெனில் வரும், நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த அறிவிப்பால், அரசு கட்டுமானங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கு மனு
இதற்கிடையே, கட்டுமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கட்டுனர், வல்லுனர் சங்க தமிழக பிரிவு தலைவர் எம்.அய்யப்பன் கூறியதாவது:விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பை, அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், நேற்று தமிழகம் முழுதும் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. முதல்வருக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.