| ADDED : மார் 28, 2024 11:24 PM
தேவகோட்டை : நான் காங்கிரஸ்காரன். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய என்னால் முடிந்ததை செய்வேன் என காங். ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில தலைவர் கே.ஆர். ராமசாமி தெரிவித்தார். -சிவகங்கை மாவட்ட காங்கிரசில் கோஷ்டி பூசல் வெளிப்படையாகவே உள்ளது.பிரதமர் மோடிக்கு நிகராக பிரதமராக இண்டியா கூட்டணியில் யாரும் இல்லை என சிவகங்கை காங்., எம்.பி.கார்த்தி சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு காங்., கட்சி நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு நிலவியது. காங்கிரசில் பிரதமராக யாருக்கும் தகுதி இல்லை என கூறியவருக்கு தேர்தலில் சீட் வழங்கக் கூடாது என மேலிடத்தில் சிவகங்கை மாவட்ட காங்.,கில் எதிர் கோஷ்டியினர் புகார் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உட்பட எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் சீட் கேட்டு பணம் கட்டினர். கடும் இழுபறிக்கிடையே கார்த்திக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கட்சிக்கு பல நேரங்களில் களங்கம் ஏற்படுத்தியும், தொகுதி நிலவரத்தை எடுத்துச் கூறியும் கார்த்திக்கு மீண்டும் சீட் வழங்கியது தொடர்பாக எதிர் கோஷ்டியினர் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.இந்நிலையில் காங். ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில தலைவர் கே.ஆர். ராமசாமி கூறுகையில்,வெளியூர் சென்றதால் காரைக்குடியில் நடந்த பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.ராமநாதபுரம், சிவகங்கை தொகுதியில் பிரசாரம் செய்வேன். மேலும் கட்சி தலைமை கூறும் தொகுதிக்கும் பிரசாரம் செய்ய அனுப்பினால் செல்வேன். சீட் கிடைத்த பின் கார்த்தி தங்களை சந்தித்து ஆதரவு கேட்டாரா என்ற கேள்விக்கு சந்திக்கவில்லை என்றார் . எதிர் தரப்பினர் கார்த்திக்கு எதிராக வேலை செய்கிறார்கள் என செய்திகள் வருகிறதே எனக் கேட்டதற்கு எனக்கு அதுபற்றி தெரியாது என நழுவிக்கொண்டார். நான் காங்கிரஸ்காரன். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய என்னால் முடிந்ததை செய்வேன்,என்றார்.