| ADDED : ஜூலை 19, 2024 11:49 PM
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியில் ரோட்டில் நடக்கும் வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.புதன் கிழமை திருப்பாச்சேத்தியில் காய்கறி சந்தை நடைபெறும். மாரநாடு, கானுார், மழவராயனேந்தல், கருங்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாரச்சந்தையில் வாங்கிச் செல்வது வழக்கம், கிராமப்புற சந்தை என்பதால் மதியம் தொடங்கி நள்ளிரவு வரை ரோட்டிலேயே செயல்படுகிறது.வியாபாரிகள் அனைவரும் ரோட்டிலேயே கடைகள் அமைப்பதுடன் பொருட்கள் வாங்க வரும் கிராமத்தினரும் ரோட்டிலேயே நின்று பொருட்களை வாங்குகின்றனர். இதனால் விலக கூட இடமின்றி சிரமம் ஏற்படுகிறது.பஸ் டிரைவர்கள் கூறுகையில்: திருப்பாச்சேத்தியில் சந்தைக்கு தனி இடம் ஒதுக்கி போக்குவரத்து இடையூறு இன்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது வாகனத்தில் ஹாரன் அடித்தால்கூட மக்கள் சிலர் தாக்குதல் நடத்தி தகராறு செய்கின்றனர். இதனால் புதன்கிழமை நகருக்குள் வாகனங்களை இயக்கவே அச்சமாக உள்ளது. விபத்து ஏற்பட்டால் வருட கணக்கில் கோர்ட், வழக்கு என அலைச்சலுக்கு ஆளாகின்றோம். எனவே சந்தைக்கு உரிய இடம் ஒதுக்க வேண்டும் என்றனர்.