| ADDED : ஏப் 03, 2024 06:45 AM
மானாமதுரை : தி.மு.க.,ஆட்சியில் மாணவர்களுக்கு 'டேப்' தருவதாக சொன்ன நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்து 3 வருடங்களாகியும் 'ஒட்டும் டேப்' கூட கொடுக்கவில்லை என அ.தி.மு.க.,செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் பேசினார்.மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரே சிவகங்கை லோக்சபா தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளர் சேவியர் தாசை ஆதரித்து செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் பேசியதாவது; கார்த்தி எம்.பி., தொகுதி பக்கமே வராத காரணத்தினால் தற்போது வரை அவரை மக்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன் மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் எடுக்கப்படும், விலைவாசி குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். தற்போது ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. பால் விலை,சொத்து வரி உயர்ந்துள்ளது.ஜெ.ஆட்சியில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை வழங்கினார்.ஆனால் தி.மு.க.,ஆட்சிக்கு வந்த பிறகு மாணவர்களுக்கு ஒரு லேப்டாப் கூட கொடுத்ததுண்டா. லேப்டாப்புக்கு பதிலாக டேப் கொடுப்பதாக சொன்னார்கள், ஒட்டுகிற டேப் கூட கொடுக்கவில்லை.கடந்த அ.தி.மு.க.,ஆட்சியில் தமிழகம் முழுவதும் 2ஆயிரம் மினி கிளினிக் கொண்டு வரப்பட்டு ஏழை மக்கள் பயன் பெற்று வந்தனர்.தி.மு.க.,ஆட்சி பொறுப்பேற்ற உடனே அனைத்து மினி கிளினிக்குகளும் மூடப்பட்டு விட்டன என்றார்.