உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வறட்சியால் கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

வறட்சியால் கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

திருப்புத்துார்,: திருப்புத்துார் ஒன்றியத்தில் அதிகரிக்கும் வறட்சியால் கோடையில் சமாளிக்க கால்நடைகள் குடிக்க தண்ணீர் தொட்டி அமைக்க விவசாயிகள் கோரியுள்ளனர். திருப்புத்துார் ஒன்றியத்தில் போதிய மழை இல்லாததாலும், அதிகரிக்கும் கோடை வெப்பத்தாலும் கடுமையான வறட்சி காணப்படுகிறது. 350க்கும் மேற்பட்ட ஒன்றியக் கண்மாய்களில் பெரும்பான்மையான கண்மாய்கள் தண்ணீரின்றி வறட்சியாக உள்ளது. விருசுழியாற்று கண்மாய்களில் 10, 15 சதவீத நீர் இருப்பே உள்ளது. மழை இல்லாவிட்டால் மே மாதத்தில் இது மேலும் வறட்சியாகும். இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் புற்கள் இன்றி தவிப்பதுடன் தாகத்தை தணிக்கவும் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகும்.இப்பகுதியில் முன்பு ஏற்பட்ட தொடர் வறட்சியால் பலர் கூட்டமாக கால்நடைகள் வளர்த்து மேய்ச்சலுக்கு செல்வது வெகுவாக குறைந்து விட்டது. தற்போது மீண்டும் வறட்சி ஏற்பட்டால் கால்நடைகள் மொத்தமாக வளர்ப்பதே அரிதாகி விடும். இதனால் கிராமங்களில் பலரும் தாமாகவே கால்நடைகளுக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்தி வருகின்றனர். மோட்டாருடன் போர்வெல் உள்ள பகுதிகளில் அருகில் சிறு பள்ளம் தோண்டி தண்ணீர் பாய்ச்சி கால்நடைகள் குடிக்க பயன்படுத்துகின்றனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஏற்பட்ட வறட்சியின் போது ஊராட்சிகள் மூலம் போர்வெல் பகுதியில் தரைமட்ட குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டன. கோடையில் அதிகரிக்கும் வெயிலைப் பொறுத்து இந்த நடவடிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை