| ADDED : பிப் 04, 2024 04:39 AM
சிவகங்கை : காளையார்கோவில் அருகே கல்லுவழியில் குடியரசு தினத்தன்று (ஜன.,26) நடந்த கொள்ளை போல், வேறு எங்கும் கொள்ளை நடக்காமல் இருக்க, கிராமங்கள் தோறும் சி.சி.டி.வி., கேமராக்களை ஊராட்சி மூலம் நிறுவ வேண்டும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.காளையார்கோவில் அருகே கல்லுவழியில் ஜன,.,26 அன்று அதிகாலை 3:00 மணிக்கு மர வியாபாரி சின்னப்பன்75, வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், அவரது தலையில் தாக்கியதோடு, அவரது மனைவி உபகாரமேரி 70, மருமகள் வேதபோதக அரசி 30, பேத்தி ஜெர்லின் 12, பேரன் ஜோவின் 10 ஆகிய 5 பேரின் தலையில் இரும்பு ராடால் தாக்கிவிட்டு, 60 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பினர். இவர்களை பிடிக்க 8 தனிப்படை அமைத்து எஸ்.பி., பி.கே., அர்விந்த், குற்றவாளிகளை தேடி வருகிறார். * கிராமங்கள் தோறும் 'சிசிடிவி' கேமரா:விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கல்லுவழி விவசாயி ஆபிரகாம் பேசியதாவது, மனசாட்சியே இன்றி சிறு குழந்தைகளை கூட தலையில் ஆயுதங்களால் தாக்கி கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நம் மாவட்டத்தில் நடைபெறாமல் இருக்க, கிராமங்கள் தோறும் 'சி.சி.டி.வி.,' கேமராக்களை அந்தந்த ஊராட்சி நிதி மூலம் பொருத்திக்கொள்ள, கலெக்டர் ஆஷா அஜித் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பேசினார்.