| ADDED : ஜன 21, 2024 03:37 AM
திருப்புவனம்: திருப்புவனம் வழியாக அரசு பேருந்துகள் வராமல் பைபாஸ் ரோட்டிலேயே செல்வதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க திருப்புவனம் நகர்ப்பகுதியில் நேர கண்காணிப்பாளரை நியமிக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்புவனம் வழியாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கமுதி, முதுகுளத்தூர், ராமேஸ்வரம், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒன் டூ ஒன், ஒன் டூ த்ரீ, உள்ளிட்ட ஒரு சில பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளும் திருப்புவனம் நகருக்குள் வந்து செல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் கமுதி கிளை பணிமனை மூலம் இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஊருக்குள் வந்து செல்கின்றன. மற்ற பேருந்துகள் அனைத்தும் பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுவதால் திருப்புவனத்தில் நீண்ட நேரம் பயணிகள் காத்து கிடக்க வேண்டியுள்ளது.திருப்புவனம் வழியாக காரைக்குடி கோட்டம் சார்பாக 80 பேருந்துகளும், மதுரை கோட்டம் சார்பாக 42 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதில் 20 சதவிகித பேருந்துகள் தவிர மற்ற அனைத்தும் நகர்ப்பகுதிக்குள் வர வேண்டும். நடைமுறையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தியை புறக்கணித்து வருகின்றன.திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பேருந்திற்காக காத்து கிடக்கின்றனர். எனவே திருப்புவனத்தில் நிரந்தரமாக நேர கண்காணிப்பாளரை பணியில் அமர்த்தி திருப்புவனம், திருப்பாச்சேத்தியை புறக்கணிக்கும் பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.