| ADDED : டிச 10, 2025 05:41 AM
கூடலுார் னப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் வனவிலங்குகளால் விளைச்சல் பாதிக்கப்படுவதாகவும், சேதமடைந்த அகழிகள், சோலார் மின் வேலியால் பயன் இல்லை என்றும், சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரம் போதுமானதாக இல்லை விவசாயிகள் புலம்பியுள்ளனர். கூடலுாரில் இருந்து போடி வரை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலங்கள் அதிகம். மொச்சை, தட்டைபயிறு, எள், சோளம், வாழை, தென்னை உள்ளிட்ட சாகுபடி அதிகம். இவற்றை யானை, காட்டுப்பன்றி, மான், குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து அதிகம் சேதப்படுத்துகின்றன. இது தவிர கடந்த சில மாதங்களாக மயில்கள் கூடுதலாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்தி வருகின்றன. சபரிமலை சீசன் காரணமாக கூடுதலான யானைகள் கூடலுார், மங்களதேவி கண்ணகி கோயில், மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிக்கு நகர்ந்து வருகின்றன. சமீபத்தில் பெய்த மழைக்குப்பின் வனப் பகுதிக்குள் கொசுக்கள் அதிகமாக இருப்பதால் யானைகள் மலையைஒட்டியுள்ள தனியார் விளைநிலங்களுக்குள் வரத் துவங்கியுள்ளன. கடந்த சில நாட்களாக கூடலுார் அருகே பளியன்குடி, வண்ணாத்திப்பாறை, சுருளியாறு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை ஒட்டி யானைகள் வந்து செல்கின்றன. வரும் வழியில் ஏராளமான பயிர்கள் சேதமாகியுள்ளன. மயில்கள் தட்டைபயிரில் உள்ள பூக்களையும், காய்களையும் கடித்து விடுவதால் விளைச்சல் குறைவு ஏற்படுகிறது. விவசாயிகள் கூறும்போது: யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, மா மரங்களை சேதப்படுத்துவதுடன் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகிறது. வனவிலங்குகளால் பயிர்களை சேதப்படுத்துவது குறித்து வனத்துறையினருக்கு விவசாயிகள் தரப்பில் பல முறை தகவல் கொடுத்தும் வனவிலங்குகள் வராமல் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல இடங்களில் அகழி சேதமடைந்துள்ளது. சோலார் மின் வேலியும் பெயரளவியிலேயே உள்ளது. வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் போதுமானதாக இருப்பதில்லை. அதுவும் கிடைப்பதில் நீண்ட நாட்கள் ஆகி விடுகிறது. அதனால் வனவிலங்குகளை ஒட்டி உள்ள தனியார் நிலங்களில் பயிர் செய்து வரும் விவசாயிகளின் குறைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.