| ADDED : ஜன 13, 2024 11:34 PM
தேனி:ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 'கிளவுட் பாரஸ்ட் சில்வர்லைன்' எனும் புதிய வகை பட்டாம்பூச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பகம் 1016 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் புலிகள் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தேனியை சேர்ந்த வனம் தொண்டு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் காலேஷ் சதாசிவம், ராமசாமி காமையா, டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கிளவுட் பாரஸ்ட் சில்வர்லைன் என்ற புதிய பட்டாம்பூச்சி வகையை கண்டுபிடித்தனர்.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு புதிய வகை பட்டாம்பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு என்டோமன் என்ற அறிவியல் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து இம்மலைப்பகுதியில் 40 இனங்களைச் சேர்ந்த 337 வகை பட்டாம் பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள முதன்மை தலைமை வனவிலங்கு பாதுகாப்பாளர் சீனிவாசரெட்டி, ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், கள இயக்குனர் பத்மாவதே உதவி புரிந்தனர்.