உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் திறப்பு நிறுத்தம்; உப்பார்பட்டி தடுப்பணை சீரமைப்பு தீவிரம்

 முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் திறப்பு நிறுத்தம்; உப்பார்பட்டி தடுப்பணை சீரமைப்பு தீவிரம்

கூடலுார்: முல்லைப் பெரியாற்றில் உள்ள உப்பார்பட்டி தடுப்பணை சீரமைப்பு பணிக்காக அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு நெல் சாகுபடி, குடிநீருக்காக வினாடிக்கு 933 கன அடி திறக்கப்பட்டு இருந்தது. அக்., 17ல் தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் உப்பார்பட்டி அருகே ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள தடுப்பணை சேதமடைந்தது. இதன் சீரமைப்பு பணிகள் தற்போது இறுதி கட்ட நிலையில் உள்ளன. இறுதி கட்ட பணிகளுக்காகவும், உத்தமபாளையம் மற்றும் ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த கரைப்பகுதியை சீரமைப்பதற்காகவும், தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த 933 கன அடி நீர் நேற்று காலை 6:00 மணியிலிருந்து முழுமையாக நிறுத்தப்பட்டது. ஓரிரு நாட்களில் சீரமைப்பு பணி முடிந்தவுடன் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 135 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3751 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 5866 மில்லியன் கன அடியாகும்.

மின் உற்பத்தி நிறுத்தம்

அணையிலிருந்து நீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டதால் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. இதற்கு முன்பு 83 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !