| ADDED : ஏப் 27, 2024 12:23 AM
பொன்னேரி:மீஞ்சூர் - வஞ்சிவாக்கம் மாநில நெடுஞ்சாலையில் தத்தமஞ்சி கிராமம் உள்ளது. இந்த நெடுஞ்சாலையானது, 200மீ. தொலைவிற்கு அங்குள்ள ஆரணி ஆற்றின் கரையை ஒட்டி, பயணிக்கிறது.கடந்த ஆண்டு புயல் மழையின்போது, ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், மேற்கண்ட சாலையின் ஒரு பகுதி, 100 மீ. நீளத்திற்கு ஆற்று நீரில் அரித்து செல்லப்பட்டது.இதனால், வாகன ஓட்டி கள் தடுமாற்றமான பயணத்தை மேற்கொண்டனர். இந்நிலையில், மேற்கண்ட சேதம் அடைந்து பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.ஆற்று கரையோரங்களில் இருந்த மண்ணை வெட்டி எடுத்து, சாலையோரங்களில் நிரப்பி சமன் செய்து வைத்து உள்ளனர். லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாலையோரத்தில் பயணித்தால், மண் சரிந்து வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதை தவிர்க்க வாகனங்கள், சேதம் அடைந்த சாலைப்பகுதியை கடக்கும்போது வலதுபுறமாகவே பயணிக்கின்றன.ஒவ்வொரு ஆண்டும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், இந்த பகுதியில் சாலை அரித்து செல்லப்படுவதும், அங்கு தற்காலிக தீர்வாக மண் நிரப்புவதும் தொடர் கதையாக உள்ளது.இப்பகுதியில், கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து, சாலை அரித்து செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.