| ADDED : ஆக 18, 2024 01:38 AM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த பெரியகரும்பூர் கிராமத்தில், 360 ஏக்கர் பரப்பில், பாசன ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றிலும், அகரம், சேகண்யம், பெரியகரும்பூர், தேவம்பட்டு, பனப்பாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் மழைநீர், மேற்கண்ட கிராமங்களின் விவசாயத்திற்கு பயன்படுகிறது.இந்த ஏரியின் கரைகள் பலவீனமாக இருந்ததால், கடந்த ஆண்டு பெய்த கன மழையின்போது, மழைநீரில், மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், 20 அடி அகலத்தில் இருந்த கரைகள், மண் அரிப்பில் ஐந்து அடியாக சுருங்கியது.இது குறித்து நம் நாளிதழில் கடந்த மாதம், 21ம் தேதி செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, தற்போது, பெரிகரும்பூர் ஏரியின் கரைகள், ஒரு கி.மீ., தொலைவிற்கு பலப்படுத்தப்படுகிறது.ஏரியில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் கரையோர பகுதிகளில் இருந்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், மண்ணை வெட்டி கரைகள் அகலப்படுத்தி, பலப்படுத்தப்படுகிறது.