| ADDED : ஜூலை 26, 2024 02:50 AM
புழல்:மாதவரம் மண்டலம் ரெட்டேரி, 700 ஏக்கரில் உள்ளது. நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை துார்வாரி சீரமைக்கு பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், மழைக்காலத்தில் 0.40 டி.எம்.சி வரை நீரை சேமிக்க முடியும்.இந்நிலையில், இந்த ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 45 வீடுகள், நேற்று முன்தினம் இடித்து அகற்றப்பட்டன.இதன் தொடர்ச்சியாக நேற்றும், விநாயகபுரம் காஞ்சி நகர் விரிவு பகுதியில், ஏரிக்கரையோரம் இருந்த 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை, போலீசார் பாதுகாப்போடு பொதுப்பணித் துறையினர் இடித்து அகற்றினர்.காஞ்சி நகரில், 10 ஆண்டுகளுக்கு முன் ரெட்டேரி கரையோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. அப்போது ஒரு கிரவுண்ட், 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி விற்கப்பட்டது.தொடர்ந்து வீடுகள் கட்டப்பட்டு, குடிநீர் மற்றும் மின் இணைப்பு பெற்று அதிகபட்சம் மூன்றடுக்கு வரை வீடுகளை கட்டியிருந்துள்ளனர்.இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பு வீடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.