உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிட்ரபாக்கம் அணைக்கட்டு கரை சேதம் பருவமழைக்கு முன் சீரமைக்க கோரிக்கை

சிட்ரபாக்கம் அணைக்கட்டு கரை சேதம் பருவமழைக்கு முன் சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை:தமிழக -- ஆந்திர எல்லையில், ஊத்துக்கோட்டை அருகே, சிட்ரபாக்கம் கிராமத்தில் ஆரணி ஆற்றின் நடுவே கட்டப்பட்ட அணைக்கட்டின் இரண்டு கரைகளும் சேதம் அடைந்துள்ளன. வரும் பருவ மழை காலத்திற்கு முன் நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆந்திராவில் உற்பத்தியாகும் ஆரணி ஆறு பிச்சாட்டூர், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி வழியே, 65.20 கி.மீட்டர் துாரம் பயணித்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது. இங்கிருந்து சிட்ரபாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாகுளம், கல்பட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு வழியே பாய்ந்து, 66.40 கி.மீட்டர் துாரம் பயணித்து பழவேற்காடு அருகே கடலில் கலக்கிறது.இதில் ஊத்துக்கோட்டை அருகே, சிட்ரபாக்கம் கிராமத்தில் கடந்த, 1989ம் ஆண்டு அணைக்கட்டு கட்டப்பட்டது. இதில், 100 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இதை ஒட்டி, கிருஷ்ணா நீர், பூண்டி நீர்த்தேக்கம் செல்லும் கால்வாய் உள்ளது. கடந்த, 2005ம் ஆண்டு உலக வங்கியின் நீர்வள, நிலவள திட்டம் வாயிலாக, 3.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அணைக்கட்டை ஒட்டி பழுதடைந்த கான்கிரீட் பிளாக்குளைகளை சீரமைத்தல், தடுப்பு சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டன. இங்கு சேகரிக்கப்படும் தண்ணீரால் சுற்றியுள்ள, 5 கி.மீட்டர் துாரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம், உயர்ந்து குடிநீர், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். கடந்தாண்டு பெய்த பலத்த மழையால் அணைக்கட்டின் ஒரு பகுதியில் கரைகளில் வைக்கப்பட்டு இருந்த கற்கள் சரிந்தது. மறு கரையில் அனந்தேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது.இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிட்ரபாக்கம் அணைக்கட்டின் இரு பக்கமும் சேதம் அடைந்துள்ள கரைகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஊத்துக்கோட்டை, சிட்ரபாக்கம் அணைக்கட்டின் வலதுபுறம், அனந்தேரி செல்லும் சாலையில் ஏற்பட்டு உள்ள தேசம் குறித்து ஊத்துக்கோட்டை நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிட்ரபாக்கம் அணைக்கட்டின் வலதுபுறம் அனந்தேரி செல்லும் சாலையில் உள்ள சேதத்தை சீரமைக்கும் பணி ஒரு வாரத்தில் துவங்கும். இடது புறம் கரை சீரமைக்க அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கியவுடன் அதற்கான பணி துவங்கி, மழைக்காலத்திற்குள் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்