| ADDED : ஆக 18, 2024 01:49 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட போளிவாக்கம் சத்திரம்.இப்பகுதியில் உள்ள திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை வழியே அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேருந்து கனரக வாகனம் என தினமும் 10,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.மேலும் தனியார் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் நெடுஞ்சாலையோரம் அணிவகுத்து நிற்கின்றன.நேற்று காலை இப்பகுதியில் கன்டெய்னர் லாரி ஒன்று நெடுஞ்சாலையோரம் பழுதாகி நின்றதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் இயந்திரம் மூலம் கனரக லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீரமைத்தனர். இதனால் இப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லை பகுதியில் இருப்பதால் ஸ்ரீபெரும்புதுார், மணவாளநகர் காவல் துறையினரிடையே கடும் குழப்பம் நிலவி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையோரம் கனரக வாகனங்கள் நிறுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.