சென்னை: சென்னை பெருநகரில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், 10,000 சதுர அடி வரை கட்டட அனுமதி வழங்கலாம். இந்த அதிகாரத்தை செயல்படுத்த, ஊராட்சிகளில் முறையான பொறியாளர்கள் இருப்பதில்லைஇதனால், சி.எம்.டி.ஏ.,வில் இருந்து திட்ட உதவியாளர்கள் அயல்பணி அடிப்படையில் உள்ளாட்சிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், பல்வேறு நடைமுறை பிரச்னைகள் ஏற்படுகின்றன.இதற்கு தீர்வாக, உள்ளாட்சிகளில் பொறியாளர் பணியிடங்களை ஏற்படுத்த, ஊரக வளர்ச்சி துறைக்கு சி.எம்.டி.ஏ., கடிதம் எழுதியது. இதன் மேல், ஊரக வளர்ச்சி துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், இதற்கு தீர்வாக ஒப்பந்த முறையில் நகரமைப்பு வல்லுனர்கள், பொறியாளர்களை தேர்வு செய்து, உள்ளாட்சிகளில் பயன்படுத்த சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் வெளியிடப்பட்டது.இதன் அடிப்படையில் விண்ணப்பித்தோருக்கு நேர்முக தேர்வு, மார்ச் 8 மற்றும் 11ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் தேர்வானோரின் வரிசை பட்டியலை, சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி, இப்பட்டியலில், 140 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் யார், எந்த உள்ளாட்சியுடன் இணைந்து செயல்படுவர் என்பதற்கான ஒதுக்கீடு குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.