பழவேற்காடு,: தமிழக அரசின் தடையை மீறி, பழவேற்காடு ஏரியில் சுற்றுலா பயணியரை படகு சவாரி அழைத்து செல்லும் படகோட்டிகள் மீது, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை மீனவ கிராமங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, எச்சரித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ பகுதியில் உள்ள உவர்ப்பு நீர் ஏரி, ஆந்திர மாநிலம் வரை பரவி உள்ளது. ஒடிஷா மாநிலம், சில்கா ஏரிக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய உவர்ப்பு நீர் ஏரி இதுதான். பல்வேறு வகையான பறவைகளை கொண்ட சரணாலய பகுதியாகவும் திகழ்கிறது. கடலும் ஏரியும் சந்திக்கும் முகத்துவார பகுதியும் அமைந்து உள்ளது. நடவடிக்கை ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. இவ்வாறு பன்முக பண்புகளை கொண்டதாக பழவேற்காடு ஏரி இருக்கிறது. இதனால் பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்து ஏரி, முகத்துவாரம், அங்குள்ள தீவுப்பகுதிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணியர் விரும்புவர். இதற்காக எந்தவித பாதுகாப்பும் இன்றி, சுற்றுலாப் பயணியர் மீன்பிடி படகுகளில் படகு சவாரிக்கு செல்லும் போது, அவ்வப்போது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2011, டிச., 25ல், இதுபோன்று பழவேற்காடு ஏரியில் சுற்றுலாப் பயணியரை சவாரி ஏற்றிச்சென்ற படகு ஒன்று கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த, 22 பேர் ஏரி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இந்த சோக சம்பவத்தை தொடர்ந்து, பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. 'தடையை மீறி படகு சவாரிக்கு, சுற்றுலா பயணியரை அழைத்துச் சென்றால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது; தடை இன்னும் தொடர்கிறது. படகு சவாரிக்கு தடை இந்த தடையை மீறி அவ்வப்போது, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலா பயணியரை படகு சவாரிக்கு அழைத்து செல்வது தொடர்கிறது. 'லைப் ஜாக்கெட், கயிறு, மிதவைகள்' உள்ளிட்ட எந்தவொரு பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல், மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணியர் பழவேற்காடு ஏரி, முகத்துவாரம் மற்றும் அங்குள்ள தீவுப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். முகத்துவாரம் பகுதிக்கு செல்பவர்கள் கடலில் இறங்கி குளிக்கும்போது, கடல் அலையில் சிக்கி உயிரிழப்பதும் தொடர்கிறது. பழவேற்காடு ஏரி பகுதியை, வனத்துறை அலுவலர்கள் சமீபத்தில் கண்காணித்தனர். அப்போது, தடையை மீறி படகு சவாரி செய்வது தெரிந்தது. இது தொடர்பாக, பழவேற்காடு வனச்சரகம், மீனவ கிராமங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி எச்சரிக்கை செய்து உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பழவேற்காடு ஏரி, முகத்துவாரம் பகுதிக்கு படகு சவாரி செய்ய, தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி, ஒரு சில மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணியரை சட்ட விரோதமாக படகு சவாரிக்கு அழைத்துச் செல்கின்றனர். பாதுகாப்பு இன்றி படகு சவாரி செய்வது, வனச்சட்டத்தை மீறிய செயல். இனிவரும் காலங்களில், மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் தடை செய்யப்பட்ட படகு சவாரியில் ஈடுபடக் கூடாது. சட்டவிரோதமாக படகு சவாரி செய்பவர்கள் மீது, வன பாதுகாப்பு சட்டம், 1972ன் படி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அவசியம்
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வழக்கமாக, காவல் துறையினர் காணும் பொங்கல், ஆங்கில புத்தாண்டு தினங்களில் மீனவ கிராமங்களுக்கு இதுபோன்ற சுற்றிக்கை அனுப்பவர். தற்போது வனத்துறையும் எச்சரித்து உள்ளது. அதேசமயம், எச்சரிக்கைகள் மட்டுமே தொடர்கிறது. கண்காணிப்பு இருப்பதில்லை. படகு சவாரிக்கு அழைத்துச் செல்லும் படகோட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. காவல், வனத்துறை, மீன்வளம், மாவட்ட நிர்வாகம் யார் எச்சரிக்கை செய்தாலும், அதை சிறிதும் பொருட்படுத்தாமல், படகு சவாரி தொடர்கிறது. மீண்டும் ஒரு பெரிய அசம்பாவிதம் நேரிடாமல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கடுமையான நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு தொடர்ந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.