திருப்பூர், : மாவட்டத்தில் அதிக பேர் தேர்ச்சி பெறாத பள்ளி, தேர்ச்சி சதவீதம் இந்நிலைக்கு செல்ல காரணம் என்ன என்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் குழுவினர் நாளை (13ம் தேதி) விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்வை அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, 205 மாணவர், 134 மாணவியர் என, 339 பேர் எழுதினர். இவர்களில், 100 மாணவர், 71 மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.மாணவர்களில், 105 பேரும், மாணவியரில், 63 பேரும் என மொத்தம், 168 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற்ற மாணவர்களை விட, தேர்ச்சி பெறாத மாணவர் அதிகம் என்பதால், மாணவர் தேர்ச்சி சதவீதம், 48.78 ஆக சரிந்தது. மாணவியர் தேர்ச்சி சதவீதம், 52.99. பள்ளி மொத்த தேர்ச்சி சதவீதம், 50.44.முந்தைய ஆண்டு, 79.31 சதவீத தேர்ச்சி பெற்ற இப்பள்ளி, ஒரே ஆண்டில், 28.87 சதவீதம் குறைந்து, 50.44 சதவீதம் பெற்றது. ஒரே பள்ளியில், 168 பேர் தேர்ச்சி பெறாததால், மாநிலத்தில், 15 இடங்களுக்கு பெற்றிருக்க வேண்டிய திருப்பூர், 21 வது இடத்துக்கு தள்ளப்பட்டது.இந்நிலையில், பள்ளியில் ஏன் தேர்ச்சி சதவீதம் சரிந்துள்ளது, தலைமை ஆசிரியர் - ஆசிரியர் ஒருங்கிணைப்பு, ஆசிரியர் பற்றாக்குறையா, மாணவர்களின் மனநிலை என்ன, அறிவியல், சமூக அறிவியல் தேர்வில் இவ்வளவு பேர் தேர்ச்சி பெறாமல் போக என்ன தான் காரணம் உள்ளிட்ட விபரங்களை, விசாரித்து அறிக்கையளிக்க, மாவட்ட கல்வித்துறைக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வரும், 13ம் தேதி காலை சி.இ.ஓ., கீதா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் குழுவினர் இப்பள்ளியில் விசாரணை நடத்துகின்றனர்.