| ADDED : மார் 21, 2024 11:43 AM
அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு நாளான இன்று மாலை, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா தெப்போற்சவம், அவிநாசி தேவர் சமூக மண்டபத்தார் சார்பில் நடைபெறுகிறது.தெப்பம் கட்டப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.அதில், சோமாஸ்கந்தர் மற்றும் பிரியாவிடை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.மண்டல அபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு, இன்று காலை 8:00 மணி முதல் இரவு வரை கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அவிநாசிலிங்கேஸ்வரர் கும்பாபிேஷக அன்னதான குழுவினர் செய்துள்ளனர்.மஹா தெப்போற்சவ பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவிநாசி டி.எஸ்.பி., சிவக்குமார் கூறுகையில், ''தெப்ப குளத்தில் அதிகளவு தண்ணீர் உள்ளதால், பக்தர்களின் நலன் கருதி, குறைந்த அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.அவிநாசி போலீசாருடன் அவிநாசி தீயணைப்பு துறை வீரர்களும் இணைந்து பக்தர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்,'' என்றார்.