திருப்பூர்;கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில், மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி, ஒருங்கிணைக்கும் பொறுப்பு, கோவை எம்.பி.,க்கு இருப்பதை, இத்தேர்தல் மீண்டும் நினைவூட்டுகிறது.கோவை, திருப்பூர் மாநகராட்சிகள், 50 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளன. கோவை, திருப்பூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் என, மத்திய அரசு திட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு, கோவை எம்.பி.,க்கு உள்ளது.கோவை மாநகராட்சி முழுவதும், கோவை தொகுதியில் அடங்கியுள்ளது; திருப்பூர் மாநகராட்சியில், 10 வார்டுகளும், மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஊராட்சிகளும் கோவை தொகுதிக்குள் அடங்கியுள்ளன. சரியாக கூற வேண்டுமெனில், திருப்பூர் நகரில் இருந்து, கிழக்கே 15 கி.மீ.,க்கு அப்பால் உள்ள முதலிபாளையம் கடைசி எல்லையும், கோவை தொகுதிக்குள்தான் அடங்கியிருக்கிறது.அதாவது, திருப்பூர் மாவட்டத்தில் சாமளாபுரம் பேரூராட்சி, பல்லடம் நகராட்சி, பல்லடம், பொங்கலுார் ஒன்றியங்கள், முழுமையாக கோவை தொகுதியில் உள்ளன. அத்துடன், மாநகராட்சியின், 10 வார்டுகள், திருப்பூர் ஒன்றியத்தின், மூன்று ஊராட்சிகளும் அடங்கியுள்ளன.நாட்டின், 18 வது லோக்சபா தேர்தல் மூலமாக தேர்வாகும் எம்.பி., கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில், மத்திய அரசு திட்ட பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் கடமை உள்ளது. கோவையை மட்டுமே சார்ந்து இருக்காமல், பல்லடம் சட்டசபை தொகுதி மக்களுக்காக, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய கடமையும் உள்ளது.இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'கோவை எம்.பி.,யாக தேர்வாகும் நபர், திருப்பூர் மாநகராட்சியின் 10 வார்டுகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில், மத்திய அரசு திட்ட பணிகள், முழுமையாக மக்களை சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டும். 'திஷா' கமிட்டியில் பங்கேற்று, மக்கள் பிரச்னைகளை கண்டறிந்து, அரசு மூலமாக தீர்வு பெற்றுத்தர பாடுபட வேண்டும்,' என்றனர்.