| ADDED : மே 09, 2024 04:36 AM
பல்லடம் : 'வெற்றிக்கு காரணமான இந்த சமூகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்,' என, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு, வனம் அமைப்பு அறிவுரை வழங்கியது.பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற பல்லடம், சேடபாளையம், யுனிவர்சல் பள்ளி மாணவி மகாலட்சுமிக்கு பாராட்டு விழா, வனம் அமைப்பின் சார்பில் நடந்தது. அமைப்பின் தலைவர் சுவாதி கண்ணன் வரவேற்றார். யுனிவர்சல் பள்ளி தாளாளர் சாவித்ரி, செயலாளர் வினோதரணி மற்றும் முதல்வர் விஸ்வநாதன் வகித்தனர்.செயலாளர் சுந்தரராஜ் பேசுகையில், ''பெற்றோருடைய தவப்பயன், மாணவிக்கு அமைந்த பள்ளி மற்றும் ஆசிரியர்களும் காரணமாவார்கள். எனவே, ஒட்டுமொத்த சமூகத்துக்கும் இம்மாணவி நன்றி சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. வெற்றி என்பது தனி மனிதனை சார்ந்ததல்ல. இவ்வாறு, சமூகம் செய்த நன்றியை நாம் திருப்பி செலுத்த வேண்டும்,'' என்றார்.மாணவி மகாலட்சுமி பேசுகையில், ''படிக்கும் போது கசப்பாகவும், கடினமாகவும் தான் இருக்கும். ஆனால், இறுதியில் வெற்றியை சுவைக்கும் போது தான் அதன் அருமை தெரியும். பள்ளியில் ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு புரிந்து நடந்தாலே போதும் வெற்றி நிச்சயம்,'' என்றார்.மாணவி மகாலட்சுமியின் உயர்கல்விக்கான செலவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக பல்லடம் 'ஸ்கை' குழுமத்தின் நிறுவனர் சுந்தரராஜ் அறிவித்தார்.வனம் இயக்குனர் ஈஸ் வரமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.