| ADDED : ஆக 16, 2024 11:28 PM
திருப்பூர்;திருப்பூர் - கொங்கு மெயின் ரோட்டில், ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை இருப்பு வைத்து, பெட்டிக்கடைகளுக்கு விற்பனை செய்வதாக தகவல் வந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், வடக்கு இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ., செந்தில்குமார், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் நல்லதம்பி குழுவினர் நேற்று களமிறங்கினர். கொடிக்கம்பம் அருகே, ஒரு ஓட்டு வீட்டில் நடத்திய ஆய்வில், மூட்டை மூட்டையாக பான்மசாலா, குட்கா, கூல்லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிக்கின.குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், சிவன் என்பவர், வாடகைக்கு வீடு எடுத்து, புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் பெட்டிக்கடைகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. சோதனையில், 124 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த சிவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எங்கிருந்து, எந்தவகையில் திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டது; எந்தெந்த கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டது. இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை மொத்த விற்பனை குடோன்கள் வேறு எங்கெங்கு உள்ளன என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ----வீட்டில் புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர்.