| ADDED : ஏப் 27, 2024 01:36 AM
அவிநாசி;அவிநாசி ஒன்றியம், தெக்கலுார் ஊராட்சிக்குட்பட்ட திம்மனையாம்பாளையம், செங்காளிபாளையம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.கடந்த 2000ம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையம் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தில் பதுவம்பள்ளி, காடுவெட்டி பாளையம், தெக்கலுார், செம்மாண்டம் பாளையம், சந்திராபுரம் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.கடந்த ஒரு மாதம் முன்பு தெக்கலுார் பகுதியில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ்(அன்னுார்- அவிநாசி கூட்டு குடிநீர் திட்டம்) தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.இதனால் மேட்டுப்பாளையம் இரண்டாவது குடிநீர் திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வந்தது நிறுத்தப்பட்டது.இதனால் திம்மனையாம்பாளையம், செங்காளி பாளையம் ஆகிய பகுதிகளுக்கு கடந்த இரண்டு மாதமாக தண்ணீர் வரவில்லை.ஊராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என கூறி, காலி குடங்களுடன் தெக்கலுார் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.குடிநீர் வடிகால் வாரிய இளநிலை பொறியாளர் சீனிவாசன் நேரில் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.தற்போது பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்காலிக தீர்வாக செம்மாண்டம் பாளையத்தில் உள்ள கூட்டு குடிநீர் திட்டக் குழாயில் இருந்து மக்கள் பயன்படுத்துவதற்கு குழாய் அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் கலைந்து சென்றனர்.