உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்தல் விதிகளை மீறினால் நடவடிக்கை பாயும்! அச்சகம் - மண்டப உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

தேர்தல் விதிகளை மீறினால் நடவடிக்கை பாயும்! அச்சகம் - மண்டப உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

திருப்பூர்;தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் நடவடிக்கை பாயும் என, திருமண மண்டப உரிமையாளர், அச்சக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்,சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.வடக்கு சட்டசபை தொகுதி கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். திருப்பூரைசேர்ந்த மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் பங்கேற்றனர்.லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மண்டப உரிமையாளர், அச்சக உரிமையாளர்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது; விதிமுறைகள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

மண்டபங்களுக்கு...

தேர்தல் முடிவடையும் வரை, திருமண மண்டபங்களில் தனிநபர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சி குறித்த விவரங்களை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஆர்.டி.ஓ., கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தாசில்தார் மற்றும் போலீசாருக்கு அழைப்பிதழ் நகலுடன் அளிக்கவேண்டும்.அரசியல் கட்சியினரால் வாக்காளர்களுக்கு விருந்து அளித்தல், பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்த மனுமதி அளிக்க கூடாது. அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுவது தெரியவந்தால், மண்டப உரிமையாளர்கள் மீதும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.திருமண மண்டபங்களில், அன்னதானம் என்கிற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதியில்லை. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது, அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றுடன் கூடிய விளம்பர பேனர் மற்றும் கொடி ஆகியவற்றை திருமண மண்டபங்களில் வைக்க கூடாது.

அச்சகங்களுக்கு...

லோக்சபா தேர்தல் தொடர்பாக அச்சிடும் துண்டு பிரசுரங்கள், போஸ்டர், விளம்பரங்களில், அச்சகத்தின் பெயர், முகவரி, விளம்பரம் வெளியிடுவோரின் பெயர் மற்றும் முகவரி விவரங்கள் தவறாமல் இடம் பெறவேண்டும்.பத்து துண்டு பிரசுரம், விளம்பர நகல்களை, வெளியிடுபவரின் உறுதிமொழியுடன், அச்சிடப்பட்ட மூன்று நாட்களுக்குள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அச்சிடப்படும் துண்டு பிரசுரம், விளம்பர போஸ்டரில் ஒரு பிரதி மற்றும் அச்சிடப்பட்ட மொத்த எண்ணிக்கை விவரங்கள்; வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட ரசீது ஆகிய விவரங்களை பராமரித்து வர வேண்டும்.வேட்பாளரின் அனுமதி பெறப்பட்டபின்னர்தான், பிரசார விளம்பரங்களை அச்சிட வேண்டும்; அனுமதி பெறாமல் அச்சிட்டால், சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்.சாதி, மொழி, இன அடிப்படையில் விமர்சிக்கும் வாசகங்கள், தனிநபர்களை இழிவுபடுத்தும் வாசகங்களை அச்சிடக்கூடாது. அனைத்து விதிமுறைகளையும் தவறாமல் கடைபிடிக்கவேண்டும்; மீறினால், தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு மண்டப உரிமையாளர், அச்சக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி