திருப்பூரில் துவங்கியுள்ள புத்தக கண்காட்சியில், அறிவுப்பசிக்கு விருந்தளிக்கும் அனைத்து புத்தகங்களும் ஓரிடத்தில் சங்கமித்துள்ளன.திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக்டிரஸ்ட் சார்பில், 20வது புத்தக கண்காட்சி, திருப்பூர் - காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில் நேற்றுமுன்தினம் துவங்கியது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன், கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார்.புத்தக கண்காட்சியில், மொத்தம் 157 ஸ்டால்களில், ஆன்மிகம், அறிவியல், குழந்தைகள், சிறுவர்களின் ஆரம்ப கல்விக்கு கைகொடுக்கும் வழிகாட்டி புத்தகங்கள், கலை, இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், அகராதிகள், சிறுகதை தொகுப்பு, பொது அறிவு என, அனைத்துவகையான புத்தகங்களும் ஓரிடத்தில் சங்கமித்துள்ளன. துப்பாக்கி அணி வகுப்பு
மாவட்ட காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், போலீசார் பயன்படுத்தும் ஏ.கே., 47 உட்பட பல்வேறு வகையான துப்பாக்கிகள், கலவரங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் கண்ணீர் புகை, எரிச்சலுாட்டும் புகை குண்டுகள், சத்தம் மட்டும் எழுப்பும் குண்டு, உடலில் சாயம் தெளிக்கும் குண்டு, குண்டு துளைக்காத கவச உடை ஆகியவை வைக்கப்பட்டு, அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.மகளிர் சுய உதவிக்குழுவினர், தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளனர். கண்காட்சியின் ஒருபகுதியாக, தினமும் மாலை, மேடை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. திருப்பூர் புத்தக கண்காட்சி, வரும் பிப்., 4ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை, 11:00 மணி முதல் இரவு, 9:30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்- நமது நிருபர் -.