| ADDED : ஜன 26, 2024 01:14 AM
அனுப்பர்பாளையம்;திருப்பூர் ஒன்றியம், கணக்கம் பாளையம் ஊராட்சி, அய்யம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. பள்ளியில், அய்யம்பாளையம், வாஷிங்டன் நகர், கணக்கம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த, 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப போதிய வகுப்பறை இல்லை. மூன்று மட்டுமே உள்ளது. ஒவ்வொரு வகுப்பறையிலும் இரண்டு வகுப்பு மாணவர்கள் சேர்ந்து, அமர்ந்து படிக்கின்றனர். மீதமுள்ள வகுப்பு மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக்கின்றனர்.மழை காலங்களில் மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 41.25 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டப்பட்டது. கட்டட பணி முடிந்தும் திறப்பு விழாவிற்காக காத்து இருக்கிறது. இதனால் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டப்பட்டுள்ளது.பெற்றோர் சிலர் கூறியதாவது: ஒரே வகுப்பறையில் இரு வகுப்பு மாணவர்கள் அமர்ந்து, நெருக்கடியில் படித்தால் எப்படி படிப்பு வரும். படிப்பின் தரம் எப்படி இருக்கும். கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பள்ளிக்கான இடத்தை அளவீடு செய்து, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மாணவர்கள் நலன் கருதி பள்ளியை சுற்றி வேலி அமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.