திருப்பூர்:திருப்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட தகுதியானோர் பட்டியலில், வேட்பாளர் 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.திருப்பூர்
வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, அந்தியூர், பவானி, கோபி
உள்ளிட்ட ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் லோக்சபா
தொகுதிக்கான வேட்புமனுக்கள், கலெக்டர் அலுவலகத்தில் பெறப்பட்டது.
அ.தி.மு.க., - இ.கம்யூ., - பா.ஜ., - நாம்தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சி
வேட்பாளர்கள், சுயேச்சைகள் என, 38 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
செய்திருந்தனர்.கலெக்டர் அலுவலக இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட
அரங்கில், நேற்று காலை, 10:00 மணி முதல் வேட்புமனு பரிசீலனை, தேர்தல்
நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. டி.ஆர்.ஓ.,
ஜெய்பீம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பிரிவு
அதிகாரிகள் பங்கேற்றனர். மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்,
வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மனுக்கள்
பரிசீலிக்கப்பட்டன. வேட்பாளரால் ஒன்றுக்குமேல் தாக்கல்
செய்யப்பட்ட கூடுதல் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன.
மாற்றுவேட்பாளர்கள், தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். முழுமையான
விவரங்கள் பூர்த்தி செய்யப்படாத மற்றும் தவறான தகவல் அளிக்கப்பட்ட
மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.தகுதியான வேட்பாளர்கள்
பரிசீலனையில்,
22 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 16
வேட்பாளர்களின் மனுக்கள் தகுதியுள்ளவையாக
ஏற்றுக்கொள்ளப்பட்டன. அருணாசலம் (அ.தி.மு.க.,), சுப்பராயன்
(இ.கம்யூ.,), முருகானந்தம் (பா.ஜ.,), சீதாலட்சுமி (நாம் தமிழர்),
அபிநயா (நாம் தமிழர் கட்சி மாற்று), பழனி (பகுஜன் சமாஜ்), மலர்விழி
(ராஷ்ட்ரிய சமாஜ் பக் ஷா), ஜனார்த்தனம் (தமிழக மக்கள் தன்னுரிமை
கட்சி), சந்திரசேகர் (பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி) மற்றும் கண்ணன்,
செங்குட்டுவன், சுரேஷ், வேலுசாமி, கார்த்திகேயன், சுப்பிரமணி,
சதீஷ்குமார் ஆகிய ஏழு சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வேட்புமனு வாபஸ் பெற, நாளை கடைசிநாள். வாபஸ் நேரம் முடிந்தபின்,
வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.