உடுமலை:உடுமலை அமராவதி அணையிலிருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, நாளை (25ம் தேதி) முதல், மார்ச் 15 வரை நீர் திறக்கப்படுகிறது. இதன் வாயிலாக, இரு மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.கடந்தாண்டு, தென் மேற்கு பருவ மழை ஏமாற்றியதால், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, உயிர்த்தண்ணீர் மட்டும், மூன்று முறை திறக்கப்பட்டு, டிச., 31ல் நிறைவு செய்யப்பட்டது.இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடந்த, 9ம் தேதி அணை நிரம்பியது.கடந்த, 15 நாட்களாக அணையிலிருந்து உபரி நீர், ஆறு மற்றும் பிரதான கால்வாய் வழியாக திறக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், அணையில் திருப்தியான நீர் இருப்பு உள்ள நிலையில், நிலைப்பயிர்களான, நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு, தொடர்ந்து நீர் வழங்க வேண்டும்,என கோரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில், அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, 7 நாள் திறப்பு, 7 நாள் அடைப்பு என்ற சுற்றுக்கள் அடிப்படையில், நாளை (25ம் தேதி ) முதல், வரும் மார்ச் 15 வரை நீர் திறக்கப்படுகிறது.இதன் வாயிலாக, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவிலுள்ள, 29 ஆயிரத்து, 387 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.அதே போல், புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்களுக்கு, பிரதான கால்வாயில், நாளை முதல், மார்ச் 15 வரை, சுற்றுக்கள் அடிப்படையில் நீர் திறக்கப்படுகிறது.அதிகாரிகள் கூறுகையில், 'விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், நாளை முதல் மார்ச் 15 வரை, சுற்றுக்கள் அடிப்படையில், ஆற்றின் வழியாக பழைய ஆயக்கட்டு பாசன கால்வாய்களுக்கும், பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது,' என்றனர். அணை நிலவரம்
அமராவதி அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், நேற்று காலை நிலவரப்படி, 89.51 அடி நீர்மட்டம் இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 4,002.77 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு, 258 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து, 300 கனஅடி நீர் உபரியாக திறக்கப்பட்டிருந்தது.