| ADDED : ஆக 10, 2024 02:30 AM
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொட்டமரமடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 29; பெங்களூரில் தனியார் கல்லுாரியில் இளங்கலை சட்டப்படிப்பு படிக்கிறார். இவருக்கு திருமணமாகி, இரு மகன், மகள் உள்ளனர். மனைவி தற்போது நான்காவது குழந்தைக்காக, 6 மாத கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில், விஜயகுமாருக்கும், பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த, அரசு கல்லுாரியில் படிக்கும் 19 வயது மாணவிக்கும் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திருமணமாகாதவர் எனக்கூறி, மாணவியுடன் அடிக்கடி இந்த மாணவர் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.திடீரென கல்லுாரி மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது பெற்றோர், அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.கர்ப்பத்திற்கு யார் காரணம் என மாணவியின் பெற்றோர் அவரிடம் விசாரித்தபோது, விஜயகுமாரை தெரிவித்தார். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள், விஜயகுமாரை பற்றி விசாரித்தபோது, அவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து அறிந்த மாணவி, தன்னை ஏமாற்றிய சட்டக் கல்லுாரி மாணவர் மீது போலீசில் புகார் செய்தார். குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், விஜயகுமாரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.