| ADDED : பிப் 17, 2024 05:35 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மூடப்பட்டுள்ள காவேரிப்பாக்கம் வழியை திறந்து விட வேண்டும் என ரயில்வே அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.திண்டிவனம் மேம்பாலம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக செஞ்சி செல்லும் சாலை சில நாட்களுக்கு முன் தடுப்பு ஏற்படுத்தி அடைக்கப்பட்டது. இதே போல் திண்டினம் நேரு வீதியில் பாதாள சாக்கடை பணிகளும் நடந்து வருகின்றது.ஒரே சமயத்தில் இரண்டு பணிகளும் நடந்து வருவதால், நகர பகுதியில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகத்தால் தடுப்பு ஏற்படுத்தி அடைக்கப்பட்டுள்ள காவேரிப்பாக்கம் தரைப்பாலம் அருகே உள்ள வழியை திறந்து வைத்தால், நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதை வலியுறுத்தி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதுபற்றி திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜுனன் கவனத்திற்கு வந்தது. இதை தொடர்ந்து எம்.எல்.ஏ., நேற்று பிற்பகல், நகர அ.தி.மு.க.,செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், திண்டி வனம் ரயில் நிலைய மேலா ளர் ராம்கேஷ் மீனா, ரயில்வே பாதுகாப்புப் படை சப் இன்ஸ்பெக்டர் தேசி ஆகியோரை சந்தித்தார்.அப்போது, பாதாள சாக்கடை பணிகள் மற்றும் ரயில்வே மேம்பால சீரமைப்பு பணிகள் முடியும் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள காவேரிப்பாக்கம் வழியை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ., விடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.