| ADDED : நவ 28, 2025 06:30 AM
விழுப்புரம்: தி.மு.க., பிரமுகர் மீதான வழக்கு புலன் விசாரணையில் உள்ளதால், தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என, அறிவித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் கடந்த 19ம் தேதி தி.மு.க., பிரமுகர் பாஸ்கரன் என்பவர் மீது புகார் கொடுத்தார். புகார் கொடுத்த அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன் எப்.ஐ.ஆர்., நகல் அந்த பெண்ணிற்கு வழங்கப்பட்டு, வழக்கு தற்போது புலன் விசாரணையில் உள்ளது. முதற்கட்ட விசாரணையில், வழக்கில் சம்மந்தப்பட்ட பெண்ணும், குற்றம் சாட்டப்பட்ட நபரும் பேசிய உரையாடல் பதிவுகள் கைப்பற்றப்பட்டன. இருவருடைய மொபைல் போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில், புகாரில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளில் முரண்பாடு உள்ளது. எனவே, குற்றச்சாட்டிற்கு போதுமான சாட்சியங்கள் சேகரிக்க வேண்டி தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையிலேயே கைது செய்வதோ அல்லது மற்ற நடவடிக்கையோ மேற்கொள்ளப்படும். எனவே, விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் புலன் விசாரணையில் உள்ள இவ்வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதுாறு மற்றும் விசாரணையின் போக்கை பாதிக்கும் வகையில் தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.