| ADDED : ஜூலை 11, 2024 09:31 PM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் கோவிந்தன் நகர் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வரும் குருசாமி, 48. கடையில், ஜூன் 16ல் ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சந்திரசேகரன், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக சோதனை செய்தார்.அப்போது கடைக்கு உணவு பாதுகாப்பு சான்றிதழ் இல்லை என, தெரிந்தது. அவரிடம் சான்றிதழ் பெற்று தருவதாக கூறி, சந்திரசேகரன், 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். குருசாமி, விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஜூலை 3ல் புகார் அளித்தார். அன்றைய தினமே வழக்குப்பதிவு செய்த போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். ஆனால், அன்று பணத்தை வாங்காமல் அலைக்கழித்த சந்திரசேகரன், நேற்று மதியம் குருசாமியை தொடர்பு கொண்டு பணத்தை பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.அதன்படி, பெட்டிக்கடைக்கு சென்று பணத்தை வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சந்திரசேகரனை கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடமிருந்த கணக்கில் வராத, 10,500 ரூபாய், குவாட்டர் பாட்டிலையும் பறிமுதல் செய்தனர்.